பாலியல் தொல்லை; ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய மாணவி

பர்லிங்டன் பகுதியில் ஆட்டோவில் அந்த மாணவி ஏறியுள்ளார்
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளம்பெண் நர்சிங் கல்வி பயின்று வருகிறார். இந்த மாணவி கடந்த திங்ட்கிழமை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு விடுதிக்கு திரும்பியுள்ளார்.
இதற்காக பர்லிங்டன் பகுதியில் ஷேர் ஆட்டோவில் அந்த மாணவி ஏறியுள்ளார். இதில் டிரைவர் உள்பட 4 பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நிஷாத்கஞ்ச் என்ற பகுதியில் சென்றபோது ஆட்டோவை ஓட்டிய டிரைவர் கீழே இறங்கி பயணிகள் இருக்கையில் அமர்ந்துள்ளார். மற்றொரு நபர் ஆட்டோவை ஓட்டியுள்ளார். அப்போது திடீரென அந்த டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த அனைவரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உதவிகேட்டு அலறிய நிலையில் அவரின் வாயை பொத்தி ஆட்டோவை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு ஓட்டிச்சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார். அப்போது சாலையோரம் நின்ற நபர் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சத்யம் சிங், அவரது கூட்டாளிகள் ஆகாஷ்ம், ரஞ்சித் சவுகான், அனில் சின்ஹா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், ஆட்டோ டிரைவர் மீது கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.