உன்னாவ் பலாத்காரம், கொலை வழக்கு; பா.ஜ.க. எம்.எல்.ஏ. செங்கார் விடுவிப்புக்கு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் கடும் கண்டனம்

உன்னாவ் கூட்டு பலாத்காரம், கொலை வழக்கில் குற்றவாளியாக கண்டறியப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற ஒருவருக்கு 6 ஆண்டுகளில் ஜாமீன் அளிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டில் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார் என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில், செங்காருக்கு டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இளம்பெண் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு தண்டனையை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. ரூ.15 லட்சம் ஜாமீன் தொகை அளித்து விட்டு, ஜாமீன் பெற்று செல்லலாம் என்ற நிபந்தனையின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரீஷ் வைத்யநாதன் சங்கர் இந்த உத்தரவை பிறப்பித்தனர். இந்த தீர்ப்பு பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறும்போது, தீர்ப்பால் வருத்தம் ஏற்பட்டு உள்ளது. மாமாவையும், தந்தையையும் அவர் கொலை செய்திருக்கிறார். சகோதரிக்கும் துன்பம் நேர்ந்துள்ளது. அவரை அவர்கள் விடுதலை செய்கிறார்கள் என்றால், எங்களை சிறையில் அடையுங்கள். நாங்கள் உயிர் பிழைக்கவாவது செய்வோம் என கேட்டுள்ளார். அவருடைய அடியாட்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும் பயத்துடனேயே வாழ்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
எனினும், செங்காருக்கு சிறுமியின் தந்தை மரண வழக்கில் ஜாமீன் அளிக்கப்படவில்லை. இதனால், அவர் காவலிலேயே இருப்பார். இந்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், செங்காரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு பாதிக்கப்பட்ட இளம்பெண், அவருடைய தாயார் மற்றும் வழக்கறிஞர்-சமூக ஆர்வலரான யோகித பயானா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, சி.ஆர்.பி.எப். போலீசார் அவர்களை கைது செய்து பஸ்சில் அழைத்து சென்றனர்.
அவர்கள், மாண்டி ஹவுஸ் பகுதியில் சென்றபோது, பஸ்சின் வாசல் பகுதியில் நின்ற இளம்பெண்ணின் தாயாரை கையால் குத்திய வீரர்கள், பஸ்சில் இருந்து கீழே குதிக்கும்படி கூறியுள்ளனர். இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்த பஸ்சில் பெண் சி.ஆர்.பி.எப். வீரர்கள் யாரும் இல்லை. சி.ஆர்.பி.எப். வீரர்கள் தள்ளி விட்டதும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாயார் பஸ்சில் இருந்து கீழே குதித்து விட்டார். பஸ்சில் இளம்பெண் மட்டுமே இருந்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாயார், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. மகளை சிறை பிடித்து வைத்துள்ளனர். எங்களை கொல்ல பார்க்கிறார்கள். நாங்கள் போராட்டம் செய்ய இருந்தோம். ஆனால், சி.ஆர்.பி.எப். வீரர்கள் கட்டாயப்படுத்தி மகளை தூக்கி சென்று விட்டனர். இதனால் நாங்கள் மாண்டி ஹவுஸ் பகுதியில் போராட போகிறோம் என கூறினார்.
இந்த சம்பவத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளரான சுப்ரியா ஸ்ரீநாத் கூறும்போது, கொலை மற்றும் கூட்டு பலாத்கார சம்பவத்தில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட நபர், ஆயுள் தண்டனை கைதியான ஒருவர் 6 ஆண்டுகளில் விடுவிக்கப்படுகிறார். 6 ஆண்டுகளில் ஜாமீன் அளிக்கப்படுகிறது.
என்ன வகையான நீதியிது? நாட்டின் மகள்களுக்கு நீதியுண்டா? இந்தியா கேட் பகுதியில் அமைதியான முறையில் போராட முயன்றபோது, பாதிக்கப்பட்ட இளம்பெண், அவருடைய தாயாரை டெல்லி போலீசார் இழுத்து சென்ற கொடூரம் நடந்துள்ளது. மனித தன்மையற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்டு உள்ளனர். நாகரீக சமூகத்தின் கன்னத்தில் அறைவது போன்ற சம்பவம் நடந்துள்ளது.
கோர்ட்டு தானாக முன்வந்து இதனை கையிலெடுத்து தீர்ப்பை மாற்ற வேண்டும். ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, இந்த விவகாரத்தில் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நான் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.
வழக்கு விவரம்
உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டில் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார் என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், அந்த இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி. போலீசாரால் கடந்த 2-4-2018 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை காவலில் இருந்த அவர் 9-4-2018 அன்று சிறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், 2019 ஜூலை மாதம் 23-ந்தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரின் வக்கீல் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றஅப்போது, அந்த கார் மீது லாரி மோதியதில் இளம்பெண்ணின் 2 உறவினர்கள் உயிரிழந்தனர். அந்த இளம்பெண்ணும், அவரது வக்கீலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கொல்வதற்காக குல்தீப் சிங் செங்கார் நடத்திய சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்குகளில் 2019 டிசம்பர் மாதம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், உன்னாவ் பெண் பாலியல் பலாத்காரம். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்பு ஆகிய குற்றங்களில் குல்தீப் சிங் செங்கார் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.
குல்தீப் சிங் செங்கார் 2017-ம் ஆண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், அந்த இளம்பெண்ணின் தந்தை சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து டெல்லி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
உன்னாவ் பெண் பயணித்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்புடைய வழக்கில் இருந்து குல்தீப் சிங் செங்கார் விடுதலை செய்யப்பட்டபோதும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழப்பில் தொடர்பு உள்ளிட்ட குற்றங்களில் குல்தீப் சிங் செங்கார் சிறையில் அடைக்கப்பட்டார்.






