தமிழக மருத்துவக்கல்லூரி மாணவிகள் கடலில் மூழ்கி பலி; கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றபோது விபரீதம்

மாணவிகளை காப்பாற்ற முயன்ற அப்பகுதியை சேர்ந்த மணிராஜ் உயிருடன் மீட்கப்பட்டார்.
பெங்களூரு,
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தவர்கள் கனிமொழி ஈஸ்வரன் (வயது 23), இந்துஜா நடராஜன் (23). இறுதியாண்டு தேர்வுகள் நிறைவடைந்தபின் இவர்கள் உள்பட மருத்துவ மாணவிகள் 23 பேர் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் தாண்டேலி, கோகர்ணா, முருடேஸ்வருக்கு சுற்றுலா சென்றனர்.
அவர்கள் நேற்று முன்தினம் கோகர்ணாவில் உள்ள குட்லே கடற்கரை அருகே ஜடாயுதீர்த்த கடற்கரைக்கு சென்றுள்ளனர். மாலை 6.20 மணி அளவில் மாணவிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அந்த சமயத்தில் ஏற்பட்ட ராட்சத அலையில் மாணவிகள் இந்துஜாவும், கனிமொழியும் சிக்கிக்கொண்டனர். அவர்கள் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனால் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த மணிராஜ் என்பவர், கடலில் குதித்து 2 மாணவிகளையும் காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அவரும் ராட்சத அலையில் சிக்கி கொண்டு கடலில் மூழ்கி தத்தளித்தார். இதுபற்றி அறிந்ததும் குட்லே கடற்கரையில் இருந்து நீர்சாகச குழுவினர் விரைந்து வந்து கடலில் மூழ்கி தத்தளித்த 3 பேரையும் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மணிராஜை மட்டும் உயிருடன் காப்பாற்றினர்.
ஆனால், மாணவிகள் கனிமொழி, இந்துஜாவை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் 2 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவிகள் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.