அரசியலமைப்பில் மதசார்பற்ற என்ற வார்த்தை முன்னுரையின் ஒரு பகுதியாக இருக்கவில்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு

சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல் நமக்கு தேவையா? என மோகன் பகவத் கேட்டுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில், ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒரு சிலருக்கு தவறான புரிதல் இருப்பதாகவும், இது தவறான பிரசாரத்துக்கு வழிவகுக்கிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். பற்றி ஒருவருக்கு ஒருவித கருத்து இருக்க உரிமை உண்டு. ஆனால் அது யதார்த்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். மாறாக உருவாக்கப்பட்ட கதைகள் மற்றும் இரண்டாம் நிலை தகவல்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது என்றார். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும், அந்த அமைப்பு இந்து சமூகத்தின் மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் பாடுபடுகிறது என்றும் கூறினார்.
சூரியன் கிழக்கில் உதிக்கிறது. அது எப்போது முதல் நடக்கிறது என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதனால், அதற்கும் அரசியலமைப்பு ஒப்புதல் நமக்கு தேவையாக இருக்கிறதா? என கேட்ட அவர், இந்துஸ்தான், இந்து நாடு என கூறினார்.
இதேபோன்று, அரசியலமைப்பில் மதசார்பற்ற என்ற வார்த்தை முன்னுரையின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. நெருக்கடி நிலையின்போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியால், அரசியலமைப்பு (42-வது திருத்தம்) சட்டம், 1976-ன் கீழ் சமதர்மவாதி என்ற பெயருடன் அது சேர்க்கப்பட்டது என்றும் கூறினார்.






