நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?


நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
x

எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

புதுடெல்லி,

குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது அவர் பேசும்போது, இந்த குளிர் கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார்.

அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார். நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமுக முறையில் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த விஷயம் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யலாம். இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்துகிறார். மாநிலங்களவையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வழிநடத்த உள்ளார். அவர் துணை ஜனாதிபதியான பின்னர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

இதனை முன்னிட்டு, அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

கல்விக்கான நிதியை அதிகரித்து வழங்குவது, நெல்லுக்கான ஈரப்பதம் 17 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட வேண்டும், எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதம் உள்ளிட்ட விவகாரங்களை தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்ப கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப, எஸ்.ஐ.ஆர். குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஏற்பட்ட நெருக்கடியால் நாடு முழுவதும் 40 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறி, அதுபற்றி நாங்கள் விவாதிக்க கோருவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகத் ராய் உள்ளிட்ட உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் பீகார் தேர்தல், தேச பாதுகாப்பு ஆகிய விவகாரங்களை பற்றி விவாதம் நடத்த கோரிக்கை வைக்கும் என பார்க்கப்படுகிறது. டெல்லியில் டாக்டர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதல் விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரம் முக்கிய விவாத விசயங்களில் ஒன்றாக கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு அளவு அதிகரித்து காணப்படுவது பற்றியும் பேசப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. குறுகிய காலமே நடைபெற கூடிய இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு குறைவிருக்காது என கூறப்படுகிறது.

1 More update

Next Story