‘ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை காட்டுகிறது’ - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதன் காரணம் என்ன? என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தக நிலவரப்படி 28 பைசாக்கள் சரிந்து 90.43 ஆக இருந்தது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“இந்திய ரூபாய் மதிப்பு ஏற்கனவே 90-ஐ தாண்டிவிட்டது. அரசாங்கம் எவ்வளவுதான் முரசு கொட்டினாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்பதை காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் சரியாக இருந்திருந்தால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையாது.
2014-க்கு முன்பு ‘இந்தியாவின் ரூபாய் அதன் மதிப்பை இழக்க காரணம் என்ன? இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். நாடு உங்களிடம் இருந்து பதிலைக் கோருகிறது' என்று மோடி கேட்டார். இன்று நாங்கள் மோடியிடம் அதே கேள்வியை கேட்கிறோம். அவர் பதிலளிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






