கனிமங்கள் எடுக்கும் திறனை ஆண்டுக்கு 3 லட்சம் டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு

கனிமங்களை எடுக்கும் திறனை ஆண்டுக்கு 3 லட்சம் டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதுடெல்லி,
கழிவுகளில் இருந்து முக்கிய கனிமங்களை பிரித்தெடுப்பதற்கு ஊக்கத்தொகை அளிக்கும் ரூ.1,500 கோடி திட்டத்துக்கு கடந்த செப்டம்பர் 3-ந் தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 2-ந் தேதி விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
மின்னணு கழிவுகள், பயன்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரிகள், தொழிற்சாலை கழிவுகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்து முக்கியமான கனிமங்களை பிரித்தெடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இதில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய மத்திய சுரங்கத்துறை செயலாளர் பியூஸ் கோயல் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. சுரங்கத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், ஜவகர்லால் நேரு அலுமினிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மைய பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கழிவுகளில் இருந்து முக்கிய கனிமங்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி திறனை ஆண்டொன்றுக்கு 3 லட்சம் டன்னாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.






