ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய கடற்படை தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கடற்படை போர் கப்பல்கள் அரபிக்கடலில் இருந்து பாகிஸ்தான் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழல் குறித்தும், நேற்று இரவு நடந்த தாக்குதல் குறித்தும் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Live Updates
- 9 May 2025 7:03 AM IST
விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் குழப்பம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ராணுவத்தினரைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை கடும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
சுதந்திர பலுசிஸ்தான் கேட்டு போராடும் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கே இந்தியா, தென்மேற்கே பலுச் விடுதலைப் படை என ஒரே நேரத்தில் இருவேறு தாக்குதலை பாகிஸ்தான் எதிர்கொண்டு வருகிறது.
- 9 May 2025 7:01 AM IST
வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் - அமிர்தசரஸ் மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்
போர் பதற்றம் எதிரொலியாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அமிர்தசரஸ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கதவு, ஜன்னல் அருகே நிற்கவேண்டாம் என்றும், சைரன் ஒலித்தபடி இருக்கும் என்றும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொற்கோவிலை தாக்கும் அபாயம் உள்ளதால் அமிர்தசரஸ் மக்களுக்கு அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
- 9 May 2025 6:39 AM IST
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்த இந்திய ராணுவம்
இந்தியாவின் அதிரடி தாக்குதலில் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பு சின்னாபின்னமானது. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.
இந்தியா அனுப்பிய சுமார் 25 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், அவை அனைத்தும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் டிரோன்கள் என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி கூறினார்.
- 9 May 2025 6:35 AM IST
உச்சக்கட்ட போர்ப்பதற்றம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தாக்குதலை தொடர்ந்து நடத்துகிறது.
இதனால் நாடு முழுவதும் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.