ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய கடற்படை தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கடற்படை போர் கப்பல்கள் அரபிக்கடலில் இருந்து பாகிஸ்தான் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழல் குறித்தும், நேற்று இரவு நடந்த தாக்குதல் குறித்தும் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Live Updates
- 9 May 2025 9:48 PM IST
பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
3-வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் தற்போது வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- 9 May 2025 9:39 PM IST
அரியானா மாநிலம் குருகிராம் நகரில் இன்று முதல் ஜூலை 7-ம் தேதி வரை டிரோன், பட்டாசுகள், ஏர்பலூன்கள், லேசர் லைட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிரி நாட்டு தாக்குதல் என மக்கள் பதற்றமடைய வாய்ப்பு இருப்பதால் டிரோன், பட்டாசுகள், ஏர்பலூன்கள், லேசர் லைட் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 9 May 2025 9:39 PM IST
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
- 9 May 2025 9:31 PM IST
பாகிஸ்தான் பல நகரங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அமிர்தசரசில் நான்கு குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்ட ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
- 9 May 2025 9:11 PM IST
தடுமாறும் பாகிஸ்தான் ராணுவம்
இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தாமல் தொடர்கிறது பாகிஸ்தான் ராணுவம். தொடர்ந்து 3-வது நாளாகவும் இந்திய வான் எல்லையை ஊடுருவும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கின்றன.பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடை மறித்து அழிக்கிறது இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு . இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி தாக்க முடியாமல் தடுமாறுகிறது பாகிஸ்தான் ராணுவம்.
- 9 May 2025 9:06 PM IST
டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டம் நிறைவடைந்தது. இந்த அவசர ஆலோசனை கூட்டம் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 9 May 2025 8:56 PM IST
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் மின்சார விநியோகம் முழுமையாக் நிறுத்தப்பட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சிக்கும் நிலையில் மின்சாரத்தை நிறுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- 9 May 2025 8:52 PM IST
வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவைகளை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். போர் பதற்றம் நிலவும் சூழலில் சேவைகள் தடைபடக்கூடாது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
- 9 May 2025 8:50 PM IST
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் நேற்று மாலை முதல் ராணுவ தலைமையகத்தில் இருக்கிறார்.அவர் ஒரு நல்ல விமானி. போர் விமானங்களை ஓட்டுவதில் பயிற்சி பெற்றவர்.தற்போது கௌரவ கேப்டனாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கான போர் உத்தியைத் திட்டமிடுவதில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இராணுவத்திற்கும் உதவுகிறார் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று காங்கிரஸின் வலைதளப்பதிவில் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
- 9 May 2025 8:50 PM IST
நான் இருக்கும் இடத்திலிருந்து குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்பதாக பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.