ரோகிணி ஆச்சார்யா மீது செருப்பை தூக்கி வீசிய தேஜஸ்வி... நடந்தது என்ன?

பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக தனது சகோதரியான ரோகிணி ஆச்சார்யாவுடன், தேஜஸ்வி யாதவ் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
பாட்னா,
பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளை வென்றுள்ளது. அவற்றில், பா.ஜ.க. 89 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் வென்றுள்ளது. மத்திய மந்திரி சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19, மத்திய மந்திரி ஜீதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஜ்ய சபை எம்.பி. உபேந்திரா குஷ்வஹாவின் ராஷ்டீரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை கைப்பற்றி உள்ளன.
இந்த தேர்தலில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தள கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 141 வேட்பாளர்கள் போட்டியிட்டு, வெறும் 25 இடங்களிலேயே அக்கட்சி வெற்றி பெற்றது.
இந்நிலையில், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்து உள்ளதுடன், அவருடைய குடும்பத்தில் இருந்தும் விலகி இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
இதனை செய்யும்படி சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் என்னை கேட்டு கொண்டனர். எல்லா பழிகளையும் நானே ஏற்று கொள்கிறேன் என்றும் அதில் அவர் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக கட்சி நடத்தி வருவதுடன், குடும்பத்தில் இருந்தும் பிரிந்து இருக்கிறார். இந்நிலையில், ரோகிணி ஆச்சார்யா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தனது சகோதரியான ரோகிணி ஆச்சார்யாவுடன், தேஜஸ்வி யாதவ் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பீகார் சட்டசபை தேர்தல் தோல்வியால், இந்த வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, உன்னால்தான் நாம் தோல்வியடைந்து விட்டோம். உன்னால்தான் நமக்கு சாபம் வந்து விட்டது என ரோகிணியை நோக்கி தேஜஸ்வி கூறியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
இதன்பின்பு, ரோகிணியை நோக்கி தேஜஸ்வி யாதவ் செருப்பு ஒன்றை எடுத்து வீசியுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதனாலேயே அவர் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.






