சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை

கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீதான சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைக்க உத்தரவிட்டது.
புதுடெல்லி,
கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா கடந்த ஆண்டு தனது வீட்டுக்கு உதவி கேட்டு தாயுடன் வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவரது தாயார் புகார் அளித்தார். மேலும் எடியூரப்பா பணம் கொடுத்து சம்பவத்தை மறைக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக எடியூரப்பா மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ' வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விசாரணை கோர்ட்டு, எடியூரப்பா மீது மட்டுமல்ல, சாட்சியங்களை அழிக்க முயன்றதாக மேலும் 3 பேர் மீது புதிய வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்து கோர்ட்டில் ஆஜராகுமாறு எடியூரப்பா மற்றும் பிற குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா மனுதாக்கல் செய்தார். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டு வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதை எதிர்த்து எடியூரப்பா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடியூரப்பாவை சார்பில் வாதாடிய மூத்த வக்கீல், ‘‘ஐகோர்ட்டு முக்கிய ஆதாரங்களை புறக்கணித்து விட்டது. எடியூரப்பாவை பெண் சந்தித்ததாக கூறப்படும் சம்பவத்தின் போது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறும் அறிக்கைகளை கருத்தில் கொள்ள தவறி விட்டது. வழக்கு விசாரணையை மறைக்கும் சில அறிக்கைகள் உள்ளன. ஐகோர்ட்டு உண்மைகளை புறக்கணித்தது. அவர் 4 முறை முதல்-மந்திரியாக இருந்துள்ளார்’’ என கூறினார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால உத்தரவில், ‘‘கர்நாடக ஐகோர்ட்டு இப்படிதான் விசாரணை நடத்த வேண்டும் என நீங்கள் எப்படி கட்டாயப் படுத்த முடியும். இந்த வழக்கை தகுதியின் அடிப்படையில் புதிய பரிசீலனைக்காக மீண்டும் ஐகோர்ட்டுக்கு அனுப்ப வேண்டுமா? என்பதை சுப்ரீம் கோர்ட்டு ஆராயும். அதுவரை எடியூரப்பா மீதான விசாரணை நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த விஷயத்தை மீண்டும் ஐகோர்ட்டுக்கு மாற் றுவது குறித்து பரிசீலிப்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது’’ என கூறியது.






