டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு


டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 22 May 2025 12:05 PM IST (Updated: 22 May 2025 2:49 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது. விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டாஸ்மாக் நிறுவனத்தின் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணபரிவர்த்தனையின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் 6 முதல் 8ம் தேதிவரை சோதனை நடத்தினர். மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள கணினி, மடிக்கணினி, பென் டிரைவ், சி.டி.க்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அமலாக்க துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது, அந்த மனுவை கடந்த ஏப்ரல் 8ம் தேதி தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் சென்னை ஐகோர்ட்டில் முறையிட அறிவுறுத்தியது.இதனையடுத்து, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது, அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது, இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி மீண்டும் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்துக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் முகுல் ரோத்தஹி ஆகியோர்,

கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக்கை நிர்வகித்து வருகிறது, தனி நபர்கள் பணம் பெற்றது தொடர்பாக 44 வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது, ஆனால் அமலாக்கத்துறை தற்போது தான் வழக்கில் வந்துள்ளனர். ஒரு அலுவலகத்தில் அத்துமீறி அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக கணினி, பென் டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர்.அதேபோல டாஸ்மாக் நிர்வாக அனைத்து ஊழியர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டு வருகின்றன, தனி நபர் பிரைவசியை மீறும் வகையில் ஒட்டுகேட்பு நடத்தி வருகின்றனர், இது தனிநபரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, எனவே இது தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும்.

அதேவேளையில், தனிப்பட்ட நபர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அமலாக்கத்துறை டாஸ்மார் அலுவலகத்திற்கு வந்து இதுபோன்று நடந்துள்ளனர். இது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியது. அமலாக்கத்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

அந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள்:-

தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா ? என கேள்வி எழுப்பி அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்தனர்.மேலும், முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம் ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்? என வினவியதோடு அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்பு மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என மீண்டும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும், அமலாக்கத்துறையானது அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப்பை சிதைத்துள்ளது என கூறியதோடு, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதித்து ஆணையிட்டு, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டின் கோடைகால விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்தனர்.

1 More update

Next Story