‘வந்தே மாதரம்’ பாடலின் சில முக்கியமான வரிகள் 1937-ல் நீக்கப்பட்டன - பிரதமர் மோடி

இந்தியர்களாகிய நாம் அடைய முடியாத எந்த இலக்கும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலில் 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி 'பங்கதர்ஷன்' என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. பின்னர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1882-ல் அவரது புகழ்பெற்ற 'ஆனந்தமடம்' நாவலில் இந்த பாடலைச் சேர்த்தார். இந்த பாடலானது நாட்டின் நாகரிக, அரசியல் மற்றும் கலாசார உணர்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.
இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்து, தேசிய பெருமை மற்றும் ஒற்றுமையை தொடர்ந்து தூண்டி வரும் ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், ஓராண்டுக்கு(2026 நவம்பர் 7-ந்தேதி வரை) நடைபெறக் கூடிய தேசிய பாடல் கொண்டாட்டங்களை தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் இது தொடர்பான நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;-
“வந்தே மாதரம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் குரலாக மாறியது. அது ஒவ்வொரு இந்தியரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தியது. துரதிர்ஷ்டவசமாக, 1937-ம் ஆண்டில், ‘வந்தே மாதரம்’ பாடலின் சில முக்கியமான வரிகள் நீக்கப்பட்டன. அதன் ஆன்மா நீக்கப்பட்டது. இது பிரிவினைக்கான விதைகளை விதைத்தது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் இந்த மகா மந்திரத்திற்கு ஏன் இந்த அநீதி செய்யப்பட்டது என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். இந்த பிளவுபடுத்தும் மனநிலை இன்னும் நாட்டிற்கு ஒரு சவாலாக உள்ளது. ‘வந்தே மாதரம்’ எல்லா காலகட்டங்களுக்கும் பொருத்தமானது. எதிரிகள் பயங்கரவாதத்தை பயன்படுத்தி நமது பாதுகாப்பையும், கவுரவத்தையும் தாக்கத் துணிந்தபோது, துர்க்கையின் வடிவத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பது இந்தியாவிற்கு தெரியும் என்பதை உலகம் கண்டது.
‘வந்தே மாதரம்’ என்பது ஒரு சொல், ஒரு மந்திரம், ஒரு சக்தி, ஒரு கனவு, ஒரு தீர்மானம். அது இந்தியத் தாயின் மீதான பக்தி, இந்தியத் தாயின் வழிபாடு. அது நம்மை நமது வரலாற்றுடன் இணைத்து, நமது எதிர்காலத்திற்கு புதிய தைரியத்தை தருகிறது. அடைய முடியாத எந்த உறுதியும் இல்லை, இந்தியர்களாகிய நாம் அடைய முடியாத எந்த இலக்கும் இல்லை. அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு தேசத்தை நாம் கட்டமைக்க வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.






