எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி

File Photo (PTI)
காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய ராணுவம், பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட படுபயங்கர தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இந்திய விமானப்படை விமானங்களும், கடற்படை கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டன.
இந்தியாவின் நடவடிக்கையை போருக்கான ஆயத்தம் என்று விமர்சித்த பாகிஸ்தான், சில அடாவடி அறிவிப்புகளையும் வெளியிட்டது. வாகா எல்லையை இரு நாடுகளும் மூடியது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. இதே நடவடிக்கையை பாகிஸ்தானும் எடுத்தது. இதனால் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.ராஜ்ய ரீதியிலான நடவடிக்கையை அரசு எடுத்துவரும் வேளையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சில இடங்களில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். விடிய விடிய நடந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பின்வாங்கினர். இந்த நிலையில் நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறியுள்ளது. நள்ளிரவில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் சரியான பதிலடியை கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.