ஆண் நண்பர்களுடன் பேசிய தங்கை.. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்

கூர்மையான ஆயுதத்தை எடுத்து தனது தங்கையின் கழுத்தில் ஷேர் சிங் குத்தினார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள இடோரா கோட்டியா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் நைனா தேவி(வயது 22). இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். ஆனால் திருமண வரன்களை நைனா தேவி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நைனா தேவியின் அண்ணன் ஷேர் சிங், தனது தங்கையின் செயல்பாடுகளை நோட்டமிட்டுள்ளார். நைனா தேவியின் செல்போனை பார்த்தபோது, அவர் பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது. இது குறித்து நைனா தேவியிடம் கேட்டு ஷேர் சிங் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் கூர்மையான ஆயுதத்தை எடுத்து தனது தங்கையின் கழுத்தில் ஷேர் சிங் குத்தினார். இதில் படுகாயமடைந்த நைனா தேவி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷேர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






