‘வாக்கு திருட்டை மூடி மறைக்கவே எஸ்.ஐ.ஆர். கொண்டு வரப்பட்டுள்ளது’ - ராகுல் காந்தி


‘வாக்கு திருட்டை மூடி மறைக்கவே எஸ்.ஐ.ஆர். கொண்டு வரப்பட்டுள்ளது’ - ராகுல் காந்தி
x

வாக்கு திருட்டு தொடர்பாக தங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

போபால்,

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தற்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் இது தொடர்பாக 'ஹெச் பைல்ஸ்' (H Files) என்ற பெயரில் பல்வேறு ஆதாரங்களை ராகுல் காந்தி வெளியிட்டார்.

இந்த நிலையில், வாக்கு திருட்டை மூடி மறைக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) கொண்டு வரப்பட்டுள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் உள்ள பஞ்ச்மர்ஹியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

“வாக்கு திருட்டு நடந்துள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 8-ல் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளது. தரவுகளை வைத்துப் பார்க்கும்போது இதே விஷயம்தான் மத்திய பிரதேசத்திலும், சத்தீஷ்காரிலும், மராட்டிய மாநிலத்திலும் நடந்திருக்கிறது என்பது தெரியவருகிறது.

இது தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க.வின் கூட்டு அமைப்பு. எங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. விரைவில் அவற்றை வெளியிடுவோம். தேர்தல் முறைகேடுகளை நிறுவனமயமாக்குவதற்கு பா.ஜ.க. ஒரு அமைப்பை உருவாக்குகிறது. இங்கு முக்கியமான பிரச்சினை வாக்கு திருட்டுதான். வாக்கு திருட்டை மூடி மறைக்கவே எஸ்.ஐ.ஆர். கொண்டு வரப்பட்டுள்ளது.”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story