வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல்தொடர்பு செயலிகளை பயன்படுத்த சிம் கார்டு இணைப்பு கட்டாயம்

புதிய விதிமுறைகளை செயல்படுத்த, செயலிகளை இயக்கும் நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து குறுஞ்செய்தி செயலிகளும் இனி சிம் கார்டுடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
செயலியை பயன்படுத்தும் சாதனத்தில், கணக்கை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட அதே சிம் கார்டு இருந்தால்தான் தொடர்ந்து சேவையை பெற முடியும். சிம் கார்டு இல்லாவிட்டால், சேவை முடக்கப்படும். இந்த புதிய விதிமுறைகளை செயல்படுத்த, செயலிகளை இயக்கும் நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் வெப் போன்ற இணையதள அடிப்படையிலான சேவைகள், அதிகபட்சமாக 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே துண்டிக்கப்படும். மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கும். வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்னாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட அனைத்து செல்போன் எண் அடிப்படையிலான தகவல் தொடர்பு செயலிகளும் இந்த உத்தரவின் கீழ் வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்தோ அல்லது சிம் கார்டு இல்லாமலோ செயலிகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.






