“ஆண்-பெண் உறவின் போது ஏற்படும் உடல் ரீதியான நெருக்கம்..” - திருமணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கருத்து

கோப்புப்படம்
தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
புதுடெல்லி,
மராட்டியத்தை சேர்ந்த பெண் ஒருவர், வக்கீல் ஒருவருடன் 3 ஆண்டுகளாக நெருங்கி பழகினார். அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்ய வக்கீல் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அந்த பெண்ணின் முந்தைய திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணத்துக்கு பெண் மறுப்பு தெரிவித்தார். எனினும் இருவரும் நெருங்கி பழகியதில் பெண் கர்ப்பமடைந்தார். பின்னர் அதை கலைத்தார். பின்னர் திருமணம் செய்ய வக்கீலிடம் வற்புறுத்தியபோது, அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது சத்ரபதி சாம்ராஜ்நகர் போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை ஐகோர்ட்டு நிராகரித்தது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் நாகரத்னா, மகாதேவன் அமர்வு நேற்று விசாரித்தது.
பின்னர் வக்கீல் மீது தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் இதுபோன்ற தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியதும், கவலைக்குரியதும் ஆகும் என தெரிவித்த நீதிபதிகள், குற்றவியல் நீதி எந்திரத்தை தவறாக பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றும் காட்டமாக தெரிவித்தனர்.
ஒவ்வொரு கசப்பான உறவையும் கற்பழிப்பு குற்றமாக மாற்றுவது குற்றத்தின் தீவிரத்தை அற்பமாக்குவது மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அழிக்க முடியாத களங்கத்தையும்,, கடுமையான அநீதியையும் ஏற்படுத்துகிறது எனவும் சாடினர். பாலியல் வன்கொடுமை என்பது மிகவும் கடுமையான வகையைச் சேர்ந்தது என்பதால், உண்மையான பாலியல் வன்முறை, வற்புறுத்தல் அல்லது சுதந்திரமான ஒப்புதல் இல்லாத சந்தர்ப்பங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘ஆண்-பெண் உறவின் போது ஏற்படும் உடல் ரீதியான நெருக்கத்தை, அந்த உறவு திருமணத்தில் உச்சத்தை அடையத் தவறியதால், பின்னோக்கிப் பார்க்கும்போது பாலியல் வன்கொடுமை குற்றமாக முத்திரை குத்த முடியாது. ஆனால் நம்பிக்கை மீறப்பட்டு கண்ணியம் மீறப்பட்ட உண்மையான வழக்குகளுக்கு சட்டம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டனர்.
தோல்வியடைந்த அல்லது உடைந்த உறவுகளுக்கு குற்றச்சாயல் கொடுக்கப்படும் கவலையளிக்கும் போக்கை இந்த கோர்ட்டு பல சந்தர்ப்பங்களில் கவனத்தில் கொண்டுள்ளது என்றும் வருத்தத்துடன் கூறினர்.






