கொலை முயற்சி வழக்கு: குற்றவாளி தப்பிக்க உதவிய நடிகை கைது


கொலை முயற்சி வழக்கு: குற்றவாளி தப்பிக்க உதவிய நடிகை கைது
x

கோப்புப்படம்

ஜனதா தளம்(எஸ்) பிரமுகரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றவர் தப்பிக்க உதவிய நடிகையை போலீசார் கைது செய்தனர்.

தாவணகெரே,

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சி பிரமுகராக இருந்து வருபவர் அஸ்கர். இவரை கடந்த 10-ந் தேதி தாவணகெரே டவுன் பாஷா நகரில் வைத்து ஒரு கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அஸ்கரை கொலை செய்ய முயன்றது, அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான காலித் பயில்வான் என்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக அவர், அஸ்கரை கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

அதையடுத்து தலைமறைவாக இருந்த காலித் பயில்வான் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடினர். மேலும் இதுகுறித்து ஆஜாத்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது காலித் பயில்வான் பெங்களூரு, கோவா உள்பட பல்வேறு இடங்களுக்கு தப்பிச் சென்றதும், அவர் தப்பிக்க பணமும், அடைக்கலமும் தந்து ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த, மாயகொண்டா தொகுதி காங்கிரஸ் பிரமுகரான சவிதா மல்லேஷ் நாயக் உதவி இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர் நடிகையும், மாடல் அழகியும் ஆவார். ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்தபோது மாயகொண்டா தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு இருந்தார். ஆனால் டிக்கெட் கொடுக்காததால் அவர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்திருந்தார். தற்போது காங்கிரஸ் சார்பிலும் மாயகொண்டா தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டு காய்நகர்த்தி வந்தார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

அதையடுத்து பெங்களூருவில் பதுங்கி இருந்த சவிதாவை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் காலித் பயில்வானை வலைவீசி தேடி வருகிறார்கள். ஜனதா தளம்(எஸ்) பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் காங்கிரஸ் பெண் பிரமுகர் கைதாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story