அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருமானம்

கூட்ட நெரிசல் அதிகரித்ததால் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. தொடக்கத்தில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்ததால் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வரை 13 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்தவகையில் 15 நாட்களில் கோவிலுக்கு கிடைத்த வருமானம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மண்டல சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறந்து 15 நாட்களில் ரூ.92 கோடி நடை வருமானம் வந்துள்ளது. கடந்த சீசனின்போது 30-ந்தேதி வரை ரூ.69 கோடி கிடைத்திருந்தது. அந்தவகையில் கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம்.
இதில் அரவணை விற்பனை மூலம் ரூ.47 கோடி வந்துள்ளது. கடந்த சீசனை விட (ரூ.32 கோடி) 46.86 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. மொத்தம் 47 லட்சம் டின் அரவணை 15 நாட்களில் விற்பனையானது. கடந்த சீசனை போல், இந்த சீசனிலும் இதுவரை அப்பம் விற்பனை மூலம் ரூ.3.5 கோடி கிடைத்துள்ளது. காணிக்கை மூலம் வருமானம் ரூ.26 கோடி கிடைத்தது. இது கடந்த சீசனை விட (ரூ.22 கோடி) 18.18 சதவீதம் கூடுதலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






