புத்தொழில் நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கான விதிமுறைகள் தளர்வு

புத்தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் சார்பில் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது
புதுடெல்லி,
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் 42-வது நிறுவன நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், புதிய தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கு மத்திய அரசின் சார்பில் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த நிதியை பெற விரும்பும் நிறுவனங்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படும் நிலைத்தன்மை மற்றும் சாத்தியக்கூறுகளை நிரூபிக்க வேண்டியிருந்தது.
இதனால், பல புதிய நிறுவனங்கள் ஆரம்ப காலத்திலேயே நிதி பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது, ஆழமான தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் விரைவில் நிதி உதவி பெறுவதற்காக, இந்த மூன்று ஆண்டு கால நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, புதிய நிறுவனங்கள் விரைவாக வளரவும், தங்கள் திட்டங்களைச் செயல்படுத்த ஆரம்பத்திலேயே ஊக்கமளிப்பதாகவும் அமையும் என்றார்.






