அன்புமணி மீது டெல்லி போலீஸில் ராமதாஸ் தரப்பு புகார்

தேர்தல் ஆணையமும், அன்புமணியும் கூட்டாக சேர்ந்து சதி செய்துள்ளதாக ஜிகே மணி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். பாமக தங்களுடையதுதான் என்று ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
மாம்பலம் சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். தேர்தல் ஆணையமும் அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்துள்ளது. இதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ராமதாஸ் சார்பில் ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உரிமையியல் நீதிமன்றம் சென்று முறையிடுங்கள் என்று கோர்ட்டு தெரிவித்தது.
இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது, பாமக கவுரவ தலைவராக உள்ள ஜி.கே மணி புகார் அளித்துள்ளார். அதில் அவர், "அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆவணங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியின் தலைவர் பதவி இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. போலியான ஆவணங்களை வழங்கி தலைவர் பதவி பெற்றுள்ள அன்புமணி மீது நடவடிக்கை வேண்டும்." என்று கூறியுள்ளார்.






