‘அரசு பங்களாவில் இருந்து ராப்ரி தேவி வெளியேறமாட்டார்’ - ராஷ்டிரிய ஜனதா தளம் திட்டவட்டம்


‘அரசு பங்களாவில் இருந்து ராப்ரி தேவி வெளியேறமாட்டார்’ - ராஷ்டிரிய ஜனதா தளம் திட்டவட்டம்
x

ராப்ரி தேவி வசிக்கும் அரசு பங்களா மாநில எதிர்க்கட்சி தலைவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி, கடந்த 20 வருடங்களாக பாட்னாவில் உள்ள 10, சர்குலர் ரோடு பகுதியில் இருக்கும் அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த அரசு பங்களாவில் இருந்து ராப்ரி தேவியை காலியை செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராப்ரி தேவி வசிக்கும் அரசு பங்களா, பீகார் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான 1, அன்னே மார்க் அமைந்துள்ள சாலைக்கு எதிர்புறத்தில் உள்ளது. இந்நிலையில், ராப்ரி தேவிக்கு பீகார் அரசின் கட்டிட கட்டுமானத் துறை அனுப்பியுள்ள நோட்டீசில், அவர் வசிக்கும் அரசு பங்களா மாநில எதிர்க்கட்சி தலைவருக்கான இல்லமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராப்ரி தேவியை 39, ஹார்டின்ஜ் ரோடு பகுதியில் உள்ள அரசு இல்லத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு பங்களாவில் இருந்து ராப்ரி தேவி வெளியேறமாட்டார் என ராஷ்டிரிய ஜனதா தளம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் மன்கானி லால் மண்டல் கூறுகையில், “லாலு பிரசாத் மீது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இருக்கும் வெறுப்பை இந்த முடிவு காட்டுகிறது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு பங்களாவை ஒதுக்குவதற்கு முதல்-மந்திரி நிதிஷ் குமார் 20 ஆண்டுகளாக ஏன் காத்திருந்தார்? லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவி இருவரும் முதல்-மந்திரிகளாக பணியாற்றியுள்ளனர் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்,

அதே சமயம், மாநில மந்திரி சந்தீஷ் குமார் சுமன் கூறுகையில், “முன்னாள் முதல்-மந்திரிகள் வாழ்நாள் முழுவதும் வசிப்பதற்கான முந்தைய விதியின்படி, ரப்ரி தேவிக்கு இந்த பங்களா ஒதுக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பைத் தொடர்ந்து அந்த விதி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ரப்ரி தேவியிடம் இருந்து பங்களாவை நாங்கள் பறிக்கவில்லை. மேலும், எந்த பங்களாவை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story