28-ந்தேதி கர்நாடகம் செல்கிறார் பிரதமர் மோடி

உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி ஒருநாள் சுற்றுப்பயணமாக வருகிற 28-ந்தேதி கர்நாடகம் வர உள்ளார். அன்றைய தினம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் நடக்கும் லட்சகண்ட கீத பாராயணத்தில் பங்கேற்க உள்ளார். இதனை உறுதிப்படுத்தி உள்ள பிரதமர் அலுவலகம், இதுபற்றி கர்நாடக தலைமை செயலாளருக்கு கடிதமும் எழுதி உள்ளது. 28-ந்தேதி காலை 11.05 மணிக்கு டெல்லியில் இருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்கு செல்கிறார்.
காலை 11.35 மணிக்கு உடுப்பி ஹெலிபேடை சென்றடையும் மோடி, அங்கிருந்து மதியம் 12 மணிக்கு உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு கிருஷ்ணரை தரிசனம் செய்தபிறகு லட்சகண்ட கீத பாராயணத்தில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 1.35 மணி அளவில் உடுப்பியில் இருந்து ஹெலிகாப்டரில் மங்களூருவுக்கு செல்லும் மோடி, அங்கிருந்து மதியம் 2 மணி அளவில் கோவாவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி உடுப்பியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






