மகாத்மா காந்தி மீது பிரதமர் மோடிக்கு வெறுப்பு உள்ளது: ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் காட்டம்

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் பிரதமர் மோடியை எப்போதும் கலக்கமடையச் செய்துள்ளது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி,
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: - பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயங்கள் மீது ஆழமான வெறுப்பு உள்ளது — மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் ஏழைகளின் உரிமைகள். மகாத்மா காந்தி முன்வைத்த கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்குப் பார்வையின் உயிர்ப்பான வெளிப்பாடாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் திகழ்கிறது. கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு இது ஒரு வாழ்வாதார ஆதாரமாக இருந்து வருகிறது. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்தத் திட்டம் ஒரு முக்கியமான பொருளாதார பாதுகாப்பு வலையாக செயல்பட்டு, அதன் அவசியத்தை மீண்டும் நிரூபித்தது.
இத்தகைய முக்கியத்துவம் கொண்ட திட்டமே பிரதமர் மோடியை தொடர்ந்து அசௌகரியப்படுத்தி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, அவரது தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்த முயற்சித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரவே அவர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
இந்த புதிய மசோதா, மகாத்மா காந்தியின் லட்சியங்களுக்கு நேரடியான அவமதிப்பாகும். இந்தியாவில் பரவலான வேலையின்மையால் இளைஞர்களின் எதிர்காலத்தை ஏற்கனவே பாதித்துள்ள மோடி அரசு, தற்போது ஏழை கிராமப்புற குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையே குறிவைக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.






