மெட்ரோ திட்டத்தை அரசியலாக்குவது துரதிருஷ்டவசமானது - மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார்

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த மகத்தான நிதி ஒப்புதலை மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டார் என மனோகர் லால் கட்டார் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் வீட்டுவசதி, நகர்ப்புறத் துறை மந்திரி மனோகர் லால் கட்டார் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மெட்ரோ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலாக்குவது துரதிருஷ்டவசமானது. சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு 2024-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி, 119 கி.மீ. பாதைக்கு ரூ.63,246 கோடி என்ற அளவில் மத்திய அரசு அளித்த மகத்தான நிதி ஒப்புதலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டார். இது இதுவரை அனுமதிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய மெட்ரோ திட்டமாகும்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களில் பின்வரும் முரண்பாடுகள் உள்ளன:
1. சென்னை மெட்ரோ அமைப்பை விட கோயம்புத்தூரில் குறைவான பாதை நீளம் உள்ளது. ஆனால் சென்னையுடன் ஒப்பிடும்போது அதிக போக்குவரத்து கணிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் பல தவறுகள் தெரிகின்றன.
2. சாலை போக்குவரத்திற்கும் மெட்ரோவிற்கும் இடையிலான திட்டமிடப்பட்ட சராசரி பயண நீளங்கள் மற்றும் வேக வேறுபாடுகளை பார்க்கும்போது, மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு மக்கள் மாறுவதற்கான சாதகமான எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை.
3. கோயம்புத்தூரின் DPR-ன் படி, 7 மெட்ரோ நிலைய இடங்களில் போதுமான பாதை உரிமைகள் இல்லை.
4. மதுரையின் விரிவான இயக்க திட்டத்தின்படி, தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது பேருந்து போக்குவரத்துக்கான BRTS திட்டம் போதுமானது என்பது தெளிவாகிறது.
5. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவை நகராட்சி மக்கள் தொகை(CMC) 257 சதுர கி.மீ பரப்பளவில் 15.85 லட்சமாகவும், கோவை உள்ளூர் திட்டமிடல் பகுதி(LPA) மக்கள் தொகை 1,287 சதுர கி.மீ பரப்பளவில் 7.7 லட்சமாகவும் உள்ளது. CMC-ஐ விட LPA சுமார் 5 மடங்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில், போக்குவரத்து மாற்ற கணிப்புகளுக்கு தேவையான காரணங்கள் இருக்க வேண்டும்.
மேலும், பல்வேறு நகரங்களில் 10,000 குளிர்சாதன வசதி கொண்ட மின் பேருந்துகளை வழங்குவதற்காக மத்திய அரசின் திட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பேருந்துகள், டிப்போ உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் மீட்டர் வசதிகளுக்கு மத்திய நிதியுதவி வழங்கப்படுகிறது. பலமுறை வற்புறுத்தப்பட்ட போதிலும், தமிழக அரசு இதுவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






