டெல்லியில் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ‘திடீர்’ சந்திப்பு

அமெரிக்காவுடனான உறவின் தற்போதைய நிலை குறித்து அவர்கள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி சமீபத்தில் ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்பு நடவடிக்கைக்கு இடையே இவரது இந்த பயணம் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்தது.
ஆகஸ்டு 31-ந் தேதி மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிகளில் நடைபெற்ற சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை, பின்னர் ரஷிய அதிபருடன் காரில் இருந்தபடியே சுமார் 1 மணிநேரம் பிரதமர் மோடி பேசியது போன்றவை மேலை நாடுகளில் சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பயணத்துக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் போக்கில் மாற்றம் இருப்பதாக தெரிய வருகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் நட்பு பாராட்டுவது பற்றி இரு தலைவர்களும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது உலக நாட்டினரின் வித்தியாச பார்வையை தருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று திடீரென ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் புகைப்படத்தை இருவரும் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு விவரங்கள், அமெரிக்காவுடனான உறவின் தற்போதைய நிலை, உள்நாட்டு நிலவரங்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி அவர்கள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.