நிலவுக்கு 2040-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ முன்னாள் தலைவர் பேச்சு


நிலவுக்கு 2040-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்:  இஸ்ரோ முன்னாள் தலைவர் பேச்சு
x

2040-ம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைக்கும் பணியிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது என்றார்.

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடந்த 5-வது இந்திய வானியல் சமூக கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் கிரண் குமார் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்போது, தற்போது இருந்து 2040-ம் ஆண்டுக்குள் விண்வெளி செயல்பாடுகளில், முழு அளவிலான திட்டங்கள் நிறைய நடைபெற உள்ளன. 2040-ம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி பாதுகாப்பாக திருப்பி கொண்டு வரவேண்டும் என்ற ஒரு திட்டம் உள்ளது.

2040-ம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைக்கும் பணியிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது என்றார். வருங்காலத்தில் சந்திரயானின் தொடர்ச்சியான திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும். ஜப்பானுடன் இணைந்து லேண்டர் மற்றும் ரோவர் பணிகள் நடந்து வருகின்றன.

விண்வெளியை உற்றுநோக்குவதிலும், அண்டவெளியை புரிந்து கொள்வதிலும் இந்தியா உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இது, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் கல்வி நிலையங்கள், என்ஜினீயரிங் மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட பங்காற்ற நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்றார்.

ராணுவ நோக்கங்களுக்காக அல்லாமல் சமூக பயன்பாட்டிற்காக விண்வெளி தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடு இந்தியா மட்டுமே என பெருமையுடன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், கல்வியியலாளர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

1 More update

Next Story