சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.. மிகப்பெரிய சிக்கலை சந்திக்கப்போகும் பாகிஸ்தான்


சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.. மிகப்பெரிய சிக்கலை சந்திக்கப்போகும் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 24 April 2025 4:42 PM IST (Updated: 24 April 2025 4:59 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைத்து வருகிறது.

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நேற்று முன்தினம், பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஒவ்வொருவரிடமும் மதத்தைக் கேட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தி உள்ளனர். கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்துள்ள போதிலும், அப்பாவி மக்களைக் குறிவைத்து இதுபோல தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், தாக்குதலில் ஈடுபட்ட சிலர் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் போர் அல்லது பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா எதுவும் செய்யவில்லை. ஆனால், இந்த முறை அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அதிரடியாக இந்தியா நிறுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 மாகாணங்கள் சிந்து நதியை நம்பியே உள்ளது. விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக சிந்து நதி உள்ளது.

சிந்து நதி ஒப்பந்தம் செப்டம்பர் 19. 1960-ல் கையெழுத்தானது. சிந்து நதி என்பது இந்தியாவுக்குள் பாயும் 3 நதிகள் ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் மற்றும் அவற்றின் துணை நதிகளையும் மற்றும் பாகிஸ்தானுக்குள் பாயும் 3 நதிகள் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் மற்றும் அவற்றின் துணை நதிகளையும் உள்ளடக்கியது. ஒப்பந்தத்தின்படி, சிந்து நதி நீர்வளத்தில் 20 சதவீதம் இந்தியா கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் நேரத்தில் பாகிஸ்தான் 80 சதவீதம் பெறுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் தான் இத்தனை காலம் சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் நீங்கும்போது, அது இந்தியாவுக்கு அதிகக் கட்டுப்பாட்டைத் தருகிறது. மேலும், ஹைட்ரோ திட்டங்களையும் வேகமாக மேற்கொள்ள இது உதவுகிறது. மறுபுறம் இது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அடியாகவே இருக்கும். விவசாயம், எரிசக்தி மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகாலத் தாக்கங்களை இது ஏற்படுத்தக்கூடும்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளதால் இதன் கீழ் நிர்வகிக்கப்பட்ட மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய ஆறுகளில் இருந்து வெளியேறும் நீரை இந்தியா நிறுத்த வாய்ப்புள்ளது.

இந்த வகைகளில் பாகிஸ்தானுக்கு முக்கியமாக உள்ள சிந்து நதி மூலம் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. இதனால்தான் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது விவசாய பணிகளுக்கான விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைக்கிறது. சிந்து நதி படுகையில்தான் 61 சதவிகித பாகிஸ்தானியர்கள் வாழ்கின்றனர். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படாது என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்த நிலையில் ராம்பன் அணையின் மதகுகளை தற்போது மூடி உள்ளது.

1 More update

Next Story