ரேஷன் கடைகளில் ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்க உத்தரவு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இந்த இலவசத் தொகுப்பைப் பெறுவார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கி வரப்படும் நிலையில் சத்துணவுக்காக ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசாக மளிகைத் தொகுப்புகளை வழங்க அறிவித்து இருந்தது. இந்த மளிகைத் தொகுப்பின் மதிப்பு சுமார் ரூ.750 ஆகும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இந்த இலவசத் தொகுப்பைப் பெறுவார்கள். இந்த மளிகைத் தொகுப்பு விநியோகமானது ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசு அறிவித்து இருந்த பொங்கல் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை , 1 கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் துணிப் பை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவசமாக ஒரு கிலோ கேழ்வரகு மாவு வழங்கப்படும் என முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி ரேஷன் கடைகளில் ஏற்கனவே 2 கிலோ இலவச கோதுமை தரும் திட்டத்தை முதல்-மந்திரி ரங்கசாமி தொடங்கி வைத்து இருந்தார்.
மஞ்சள் ரேஷன் அட்டைக்கு 10 கிலோ இலவச அரிசி, சிவப்பு ரேஷன் அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கி வந்த புதுச்சேரி அரசு 2 கிலோ இலவச கோதுமையும் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து கேழ்வரகு மாவு இலவசமாக தரவேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று ரேஷன் கடைகளில் சத்துணவாக 1 கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.






