எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் அமளி:  மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 1 Dec 2025 12:59 PM IST (Updated: 1 Dec 2025 1:05 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

இந்த கூட்டத்தொடர் சுமுக முறையில் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த விஷயம் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யலாம். இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்தது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்துகிறார். மாநிலங்களவையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வழிநடத்துகிறார். அவர் துணை ஜனாதிபதியான பின்னர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

எனினும், அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம், கல்வி நிதியை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதுபற்றி விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால், மக்களவை மதியம் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் அவை 12 மணிக்கு மீண்டும் கூடியதும் எஸ்.ஐ.ஆர். பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story