ஒடிசா: வகுப்பில் துப்பாக்கியை நீட்டி தலைமை ஆசிரியரை மிரட்டிய 14 வயது மாணவன்

சிறுவனை அழைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
கேந்திரபாரா,
ஒடிசாவின் பள்ளியில் 14 வயது மாணவன் கைத்துப்பாக்கியுடன் வந்து மிரட்டியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கொருவா அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவன் சரிவர பள்ளிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. சரியாக படிப்பதில்லை.
வகுப்பறையில் இடையூறு செய்து வந்திருக்கிறான் என்றும் கூறப்படுகிறது. இதனால், சிறுவனை அழைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சத்தம் போட்டுள்ளனர். அப்போது, அந்த சிறுவன் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காட்டி, சுட்டு விடுவேன் என தலைமை ஆசிரியரையே மிரட்டியிருக்கிறான்.
இதனால் பயந்து போன அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இதுபற்றி ஒடிசா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சிறுவன் நாட்டு துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை அச்சுறுத்தி இருக்கிறான். அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். சிறுவனிடம் எப்படி துப்பாக்கி வந்தது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். கைத்துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






