பெண்களை குறி வைத்து வயலுக்குள் இழுத்து செல்லும் நிர்வாண கும்பல்; அதிர்ச்சி சம்பவம்

உத்தர பிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் இதுபோன்று இரு சம்பவங்கள் நடந்துள்ளன என கூறப்படுகிறது.
மீரட்,
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் பராலா என்ற கிராமம் உள்ளது. வயல்வெளிகள் சூழ்ந்த பசுமையான இந்த கிராமத்தில் பெண்கள் பகலிலேயே வெளியே வருவதற்கு அஞ்சும் நிலை காணப்படுகிறது. வயல்வெளியை ஒட்டி போடப்பட்ட சாலையில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத அவல நிலை உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் ஒருவர் வயலை ஒட்டி தனியாக நடந்து சென்றபோது, திடீரென 2 வாலிபர்கள் நிர்வாண கோலத்தில் பெண்ணை நோக்கி ஓடி வந்தனர். அப்படி வந்தவர்கள் அந்த பெண்ணை வயலுக்குள் இழுத்து செல்ல முயன்றனர். அப்போது, அந்த பெண் கத்தி கூச்சலிட்டார்.
போராடி அவர்களிடம் இருந்து தப்பினார். இதனை பார்த்த பள்ளி பஸ் டிரைவர் மற்றும் காவலர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை பிடிக்க ஓடினர். ஆனால், அதற்குள் அந்த வாலிபர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.
இந்த அதிர்ச்சி சம்பவம் கிராமம் முழுவதும் பரவியது. கடந்த 10 நாட்களில் இதுபோன்று இரு சம்பவங்கள் நடந்துள்ளன என கூறப்படுகிறது. ஆனால், இதனை வெளியே கூற யாரும் முன்வரவில்லை. இந்த பெண் நடந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்த பின்னரே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டிரோன் உதவியுடன் வயலில் வாலிபர்களை தேடினர். அந்த பகுதியில் 5-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களையும் வைத்து அவர்களின் இருப்பிடம் குறித்து தேடினர். ஆனால், அவர்களை கண்டறிய முடியவில்லை.
முதல்கட்ட விசாரணையில், தனியார் பள்ளி ஒன்றிற்கும் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான சம்பவங்களில் இது நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது என்று போலீஸ் சூப்பிரெண்டு ஆயுஷ் விக்ரம் சிங் கூறினார். பெண் போலீசார் மற்ற பெண்களை போல் அந்த பகுதியில் பல நாட்களாக நிறுத்தப்பட்டனர்.
ஆனால் அந்த பகுதியில் அவர்களை கண்டறிய முடியவில்லை. 4 தனிப்படைகளையும் அமைத்து போலீசார் தேடினர். எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என அவர் கூறினார்.