முதல்-மந்திரி பதவிக்கு போட்டி இல்லை... டி.கே.சிவக்குமார் வீட்டில் காலை உணவு சாப்பிட செல்லும் சித்தராமையா

கட்சி மேலிடம் கூறுவதை பின்பற்ற முடிவு செய்திருக்கிறோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி பதவிக்கு வரவேண்டும் என்று அவருடைய தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “முதல்-மந்திரி மாற்றம் விவகாரத்தில் கட்சி தொண்டர்கள் வேண்டுமானால் ஆர்வமாக இருக்கலாம். நான் அவசரப்படவில்லை. கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை முதல்-மந்திரி சித்தராமையா வீட்டிற்கு டி.கே.சிவக்குமார் சென்றார். அங்கு அவர்கள் இருவரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, சாம்பார், உப்புமாவுடன் உணவு அமர்க்களப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “கட்சி மேலிடம் என்ன கூறுமோ, அதனை பின்பற்றுவது என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இதில் எந்த குழப்பமும் இல்லை. சில ஊடக நிருபர்களே குழப்பம் விளைவித்து வருகின்றனர்” என்று கூறினார்.
இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் வீட்டிற்கு முதல்-மந்திரி சித்தராமையா நாளை செல்ல உள்ளார். அங்கு அவர்கள் இருவரும் காலை உணவு சாப்பிட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு எந்த போட்டியும் இல்லை என்பதை தெளிவுபடுத்த இதனை அவர்கள் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 8-ந்தேதி கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதுவரை சித்தராமையா முதல்-மந்திரியாக தொடர்வார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






