பீகார் முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் 10-வது தடவையாக பதவியேற்க உள்ளார்.
பாட்னா,
நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் இந்தியா கூட்டணியால் வெறும் 35 தொகுதிகளிலேயே வெற்றி பெற முடிந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 101 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் களம் கண்டு 85 இடங்களில் வெற்றிக்கனியை பறித்துள்ளது.
கடந்த முறை (2020) போலவே இந்த முறையும் நிதிஷ்குமாரே முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கிறார். அதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், மீண்டும் வரும் 20-ந்தேதி(நாளை) முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கிறார்.
இதன் மூலம் பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் 10-வது தடவையாக பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜனதா கூட்டணி முதல்-மந்திரிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் பங்கேற்பதால், காந்தி மைதானம், பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.






