பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரை சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மகள் அஞ்சனா (21 வயது). இவர் காராளிகோணத்தை சேர்ந்த தனியார் பேருந்து கண்டக்டரான நிகாசை தீவிரமாக காதலித்தார். அவரும், அஞ்சனாவை நேசித்தார். இந்த நிலையில் அஞ்சனா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி நிகாசை மணமுடித்தார். பிறகு அவருடன் சேர்ந்து வாழ்ந்தார்.
இந்த காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது திருமண வயதை எட்டியதால், காதல்ஜோடி விருப்பப்படி வாழ ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நிகாஸ் வெளியே சென்ற சமயத்தில் அஞ்சனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாரிப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா? என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.