நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை

மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஜெய்ப்பூர்,
தலைநகர் டெல்லியின் துக்லகாபாத் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் சர்மா. இவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் ரோஷன் சர்மா (வயது 23). இவர் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தானில் உள்ள கோடா பகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்குமுன் ரோஷன் சர்மாவின் தந்தை, தாயார் கோடா நகருக்கு சென்றுள்ளனர். அங்கு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றது போதும் வீட்டிற்கு வந்துவிடு என ரோஷன் சர்மாவிடம் கூறியுள்ளனர். அதற்கு மாணவன் மறுப்பு தெரிவித்துள்ளான். இதையடுத்து, ரோஷன் சர்மாவின் உடைமைகளை எடுத்துக்கொண்டு பெற்றோர் டெல்லி வந்துள்ளனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த ரோஷன் சர்மா கடந்த புதன்கிழமை தனது சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சிபெற இன்னும் ஓராண்டு படிக்க வேண்டும். இந்த முறை என்னால் தேர்வு எழுத முடியாது என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே சென்ற ரோஷன் சர்மா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியின் அறையில் தங்கி இருந்த ரோஷன் சர்மா வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் இது குறித்து போலீசில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ரெயில் தண்டவாளம் அருகே புதரில் ரோஷன் சர்மா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ரோஷனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டில் மட்டும் கோடாவில் நீட் பயிற்சி பெற்றுவந்த 18 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.