'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தேசிய விருது - பினராயி விஜயன் கடும் கண்டனம்


தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது - பினராயி விஜயன் கடும் கண்டனம்
x

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தேசிய விருது அறிவித்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2023-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்த ' 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

இதன்படி சிறந்த இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரசந்தனு மொஹபத்ரா ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்துக்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது இந்தத் திரைப்படத்துக்கு எதிராக ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டன. கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் முஸ்லீம் மதத்துக்கு மாற்றப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்தத் திரைப்படத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தேசிய விருது அறிவித்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுக்குழு, சங்க பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளா, இந்த முடிவால் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், உண்மை மற்றும் நாம் மதிக்கும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story