மும்பை: திடீர் கோளாறால் அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில் - பயணிகள் மீட்பு


மும்பை: திடீர் கோளாறால் அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில் - பயணிகள் மீட்பு
x

மும்பையில் மோனோ ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நடுவழியில் நிற்பது தொடர் கதையாகி வருகிறது.

மும்பை,

நாட்டிலேயே மும்பையில் தான் செம்பூர் - சந்த்கட்கே மகாராஜ் சவுக் (சாத் ரஸ்தா) இடையே 19.74 கி.மீ.க்கு மோனோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று காலை 7.16 மணிக்கு வடலா பகுதியில் அண்டாப்ஹில் பஸ் டெப்போ - ஜி.டி.பி.என். நிலையம் இடையே மோனோ ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் நடுவழியில் அந்தரத்தில் நின்றது. இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். நடுவழியில் ரெயில் அந்தரத்தில் நின்றதால் செய்வது அறியாது திகைத்தனர்.

இந்தநிலையில் தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எனினும் அவர்கள் செல்வதற்குள் பயணிகளை மீட்பதற்காக மற்றொரு மோனோ ரெயில் வரவழைக்கப்பட்டது. அந்த ரெயில் பழுதாகி நின்ற மோனோ ரெயில் அருகில் நிறுத்தப்பட்டது. இரு ரெயில்களின் வாசல்களுக்கும் இடையே பலகை மூலம் பாதை உருவாக்கப்பட்டு, பயணிகள் மீட்பு ரெயிலில் பத்திரமாக ஏற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ரெயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்ற மோனோ ரெயிலில் 17 பயணிகள் மட்டுமே பயணித்தனர். இதனால் மீட்பு பணி எளிதாக முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தொழில்நுட்ப கோளாறால் நின்ற மோனோ ரெயில், இழுவை ரெயில் மூலமாக அங்கிருந்து இழுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று காலை மோனோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மோனோ ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நடுவழியில் நிற்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் 19-ந் தேதி பலத்த மழையின் போது மைசூர்காலனி அருகில் மோனோ ரெயில் பழுதாகி அந்தரத்தில் நின்றது. அப்போது ரெயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தானியங்கி கதவுகளை திறக்க முடியவில்லை. இதனால் அதில் சிக்கிய 582 பயணிகள் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story