குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.15 கோடி நன்கொடை

ராஜஸ்தானில் உள்ள நாத்வாராவிற்குச் சென்று தரிசனம் செய்த முகேஷ் அம்பானி குரு ஸ்ரீ விஷால் பாவா சாஹேபிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
மும்பை,
இந்திய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது 109.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9.1 லட்சம் கோடி) சொத்துடன் உலகின் 17வது பணக்காரராக உள்ளார். ஆசியாவிலேயே அவரே மிகப்பெரிய பணக்காரராக உள்ளார் எனக் குறிப்பிடப்படுகிறது.
அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், எரிபொருள், தொலைதொடர்பு (Jio), ரீட்டெயில், மீடியா மற்றும் பசுமை ஆற்றல் ஆகிய துறைகளில் வலுவான அடிப்படை அமைப்பு கொண்டுள்ளது. அவரின் தலைமையில் ஜியோ நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது, ஜியோ பைபர், ஜியோ சினிமா, ஜியோ பிளாட்ஃபார்ம் உள்ளிட்ட பல டிஜிட்டல் சேவைகள் மூலமாக உலகளாவிய வளர்ச்சியை நோக்கி ரிலையன்ஸ் பயணிக்கிறது. மேலும், பசுமை ஆற்றல் துறையில் பெரும் முதலீடுகள் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் முன்னணி நிறுவனமாக மாறுவதே அம்பானியின் நோக்கம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட உள்ள மருத்துவமனைக்காக 15 கோடி ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார் முகேஷ் அம்பானி. அதனை தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி வழிபாட்டார். அதிகாலை கோவிலுக்கு வந்த முகேஷ் அம்பானி, சுப்ரபாத சேவையில் பங்கேற்று ஏழுமலையானை வணங்கினார். பின்னர் அவருக்கு தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்யா சவுத்ரி தீர்த்த பிரசாதங்களை வழங்கினார். மேலும் வேத பண்டிதர்கள், முகேஷ் அம்பானிக்கு வேத ஆசி வழங்கினர். தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கியப் புண்ணியத் தலமான நாத்வாராவிற்குச் சென்று தரிசனம் செய்த முகேஷ் அம்பானி குரு ஸ்ரீ விஷால் பாவா சாஹேபிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
நாத்வாராவில் நவீன வசதிகளுடன் பக்தர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேவை மையம் ஒன்றை அமைப்பதாக அம்பானி உறுதி அளித்துள்ளார். மேலும், ஸ்ரீ நாத்வாரா ஆலயத்திற்கு ரூ.15 கோடி நன்கொடையையும் வழங்கினார்.
சுமார் ரூ.50 கோடி மதிப்பில் அமையவுள்ள இந்த புதிய மையம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டிருக்கும். இது வைஷ்ணவ மூத்த குடிமக்கள் மற்றும் வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் கண்ணியமான தங்குமிடத்தை வழங்கும்.
24 மணிநேர மருத்துவப் பிரிவு, செவிலியர் மற்றும் பிசியோதெரபி சேவைகள் இதில் இடம்பெறும். ஆன்மிகச் சொற்பொழிவு செய்வதற்கான பெரிய மண்டபம் அமைக்கப்படும். புஷ்டிமார்க்க மரபின் அடிப்படையில் பாரம்பரிய உணவகம் உருவாக்கப்படும். நாத்வாராவுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் சேவை செய்யவேண்டும் என்பது அனந்த் அம்பானியின் விருப்பம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.






