சத்தீஷ்காரில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை; தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

தற்கொலைக்கு முன்பு ஹிமான்ஷு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கண்டெடுத்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் ஹிமான்ஷு காஷ்யப்(வயது 24) என்ற மாணவர் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.
இதனால் அவரது நண்பர்கள் விடுதிக்குச் சென்று பார்த்தபோது ஹிமான்ஷுவின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஹிமான்ஷு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவர் ஹிமான்ஷுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே அவரது அறையை போலீசார் சோதனையிட்டபோது, தற்கொலைக்கு முன்பு ஹிமான்ஷு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில், “என்னால் இதை செய்ய முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.