8 முறை திருமணம்.. லட்சக்கணக்கில் பணம் பறிப்பு; 9-வது திருமணத்திற்கு தயாரான ஆசிரியை கைது


8 முறை திருமணம்.. லட்சக்கணக்கில் பணம் பறிப்பு; 9-வது திருமணத்திற்கு தயாரான ஆசிரியை கைது
x

அடுத்த கணவரை கண்டுபிடிக்க சமூக வலைதளங்கள், திருமண இணையதளங்கள் ஆகியவற்றை சமீரா பயன்படுத்தியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சமீரா பாத்திமா என்பதும், அவர் ஒரு ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீரா பாத்திமா இதுவரை 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக இந்த மோசடி செயலை அவர் அரங்கேற்றி வந்துள்ளார். பணக்காரர்கள், ஏற்கனவே திருமணமான ஆண்கள் ஆகியோரை குறிவைத்து பழகி, அவர்களை தனது வலையில் சமீரா வீழ்த்தியுள்ளார். தனது 'அடுத்த கணவரை' கண்டுபிடிக்க சமூக வலைதளங்கள், திருமண இணையதளங்கள் ஆகியவற்றை சமீரா பயன்படுத்தியுள்ளார்.

அதிகபட்சமாக தனது முந்தைய கணவர் ஒருவரிடம் இருந்து ரூ.50 லட்சம், மற்றொரு கணவரிடம் இருந்து ரூ.15 லட்சம் பணத்தை சமீரா பறித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் பணத்தை இழந்த நபர்கள் போலீசில் இது குறித்து புகார் அளித்த நிலையில், சமீராவை கடந்த 29-ந்தேதி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை கைது செய்தபோது சமீரா 9-வது திருமணத்திற்கு தயாராகி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சமீராவுடன் இணைந்து மோசடியை அரங்கேற்றிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story