மண்டல சீசன்: சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய்

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி மண்டல சீசன் தொடங்கியது. அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு வழிபாடும் நடக்கிறது. சீசன் தொடங்கியது முதல் சபரிமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் தற்போது உடனடி தரிசன முன்பதிவு என்ற அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி, சபரிமலையில் கடந்த 15 நாட்களில் 92 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சீசனின்போது, முதல் 15 நாட்களில் ரூ.69 கோடி கிடைத்து இருந்தது. நடப்பாண்டில் இது 33.33 சதவீதம் அதிகம் ஆகும். வருவாயில் பெரும்பகுதி அரவணையில் இருந்து கிடைத்துள்ளது. அரவணையில் இருந்து ரூ.47 கோடி கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை கடந்த சீசனில் ரூ.22 கோடியாக இருந்த நிலையில், இந்த சீசனில் ரூ.26 கோடியாக உயர்ந்துள்ளது. இது 18.18 சதவீதம் அதிகமாகும். சபரிமலையில் கடந்த 15 நாட்களில் 13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






