திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்; சிறுமி பலி - மணமகன் கைது


திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்; சிறுமி பலி - மணமகன் கைது
x

ராகுலுக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.

ஜெய்ப்பூர்,

வட இந்தியாவில் திருமண நிகழ்ச்சிகளின்போது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு கொண்டாடும் பழக்கம் உள்ளது. இது சட்டவிரோத செயலாகும். ஆனாலும் சிலர் திருமண நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராகுல். இவருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளான 22ம் தேதி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் மணமகன் ராகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணமேடையில் நடனமாடியுள்ளார்.

அப்போது திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் மதுபோதையில் இருந்த ராகுல் தான் சட்டவிரோதமாக வாங்கிய கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராகுலின் நண்பன் சத்பால் மீனாவின் மகள் வீனா (வயது 6) தலையில் பாய்ந்தது. இதில் சிறுமி வீனா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று, மணமகன் ராகுலை கைது செய்தனர். நேற்று நடைபெறவிருந்த ராகுலின் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும், திருமண நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக துப்பாக்கி சூடு நடத்தி கொண்டாடிய ராகுலின் நண்பர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story