சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட மத்திய பிரதேச பாஜக மந்திரி


சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட மத்திய பிரதேச பாஜக மந்திரி
x

சுகாதார குறைவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு மத்திய பிரதேச பா.ஜனதா மந்திரி சர்ச்சை கருத்தை கூறினார்.

இந்தூர்,

இந்தியாவின் தூய்மையான நகரம் என 8-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர். இங்கு, கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி தற்போதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சுத்தமான நகரம் என பெயர் வாங்கிய நகரில் சுகாதார சீர்கேட்டால் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகள் தொடர்பாக மத்தியபிரதேச மந்திரியும் அந்த தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வுமான கைலாஷ் விஜயவர்கியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மந்திரி கைலாஷ் விஜயவர்கியா, ‘‘ பயனற்ற கேள்விகளை கேட்காதீர்கள்’’ என ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் ‘கண்டா’ என்றும் கூறியுள்ளார். இந்தி மொழியில் ‘கண்டா’ என்ற சொல் பேச்சு வழக்கில் குப்பை, ஒன்றுமில்லை என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

இருவருக்கும் இடையே நடந்த இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 10 பேர் இறந்தது ஒரு விஷயமா? என்ற தொனியில் மந்திரி பேசியது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது பேச்சுக்கு பா.ஜனதா மந்திரி மன்னிப்பு கோரினார். கைலாஷ் விஜயவர்கியா சர்ச்சை கருத்தை தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. பலமுறை சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கூறிவிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

1 More update

Next Story