பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு.. இன்றே கடைசி நாள்- மறந்துடாதீங்க!

இதுவரை இணைக்காதவர்கள், இன்றைக்குள் ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றுதான் கடைசி நாளாகும். பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கி உள்ளது. இதுவரை இணைக்காதவர்கள், இன்றைக்குள் ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுதான் கடைசி வாய்ப்பு எனவும், இணைக்க தவறினால், பான் எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஒருவேளை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாவிட்டால் பான் எண் செல்லாதது ஆக்கப்படும். இணைக்க தவறினால், வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது எனவும், அதிகப்படியான TDS/TCS பிடித்தம், 15G மற்றும் 15H படிவங்கள் நிராகரிப்பு, வங்கி சேவை நிறுத்தம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உங்கள் பான் எண்ணை எப்போது வேண்டுமானாலும் உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும். அதாவது, காலதாமதத்திற்கான கட்டணம் செலுத்தி ஆக்டிவேட் செய்ய முடியும்.
எப்படி இணப்பது?
* வருமான வரி இணையதள பக்கம் செல்லவும்.
* Quick Links > Link Aadhar Card- என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
* இந்தப் பக்கத்தில் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிட்டு 'Validate' கொடுக்கவும்.
* உங்களது பான் ஆதார் எண்ணோடு இணைந்திருந்தால், 'Already Linked' என்று தெரிவிக்கும்.
* இணைக்கப்படவில்லை என்றால் அதில் கேட்கும் விவரங்களை கொடுத்து ரூ 1,000 அபராதத்துடன் இணைக்க முடியும்.






