ஆட்டோவில் கடத்தல்.. துணிச்சலுடன் செயல்பட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்த பள்ளி மாணவி

தான் கடத்தப்படுவதை அறிந்த மாணவி, நிலைமையை உணர்ந்து துணிச்சலுடன் செயல்பட்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில், 16 வயது பள்ளி மாணவி ஒருவர், பள்ளிக்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினார். அப்போது அந்த ஆட்டோவில் ஏற்கெனவே ஒருவர் இருந்துள்ளார்.
பள்ளி வந்ததும், ஆட்டோவை நிறுத்துமாறு ஆட்டோ ஓட்டுநரிடம் பள்ளி மாணவி கூறினார். ஆனால் ஆட்டோ ஓட்டுநரோ ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இறங்க முற்பட்டும், அருகில் இருந்த நபர் மாணவியை இறங்க விடவில்லை.
தான் கடத்தப்படுவதை அறிந்த மாணவி, நிலைமையை உணர்ந்து துணிச்சலுடன் செயல்பட்டார். அதாவது, தன்னிடம் இருந்த காம்பஸை எடுத்து (கணக்கு பாடத்தில் பயன்படுத்தப்படும் கூர்மையான பொருள்) ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதுடன், அருகில் இருந்த நபரையும் தாக்கிவிட்டு ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். பின்னர் அந்த இடத்தை விட்டு தப்பித்து பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.
நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.