மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியுள்ள நிலையில், முதல் நாளான இன்றே அவையில் அமளி ஏற்பட்டது.
புதுடெல்லி,
ஜெகதீப் தன்கர், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைய இருந்தது. ஆனால், ஜெகதீப் தன்கர் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது திடீர் ராஜினமா குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பின.
எனினும், ராஜினாமா செய்த பிறகு ஜெகதீப் தன்கர் இது தொடர்பாக பெரிதாக எதுவும் பேசவில்லை. இந்த நிலையில், மாநிலங்களவையின் புதிய தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று தனது பணியை தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி, மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றினர்
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது உரையில், “உங்களுக்கு முன் இந்த அவையின் தலைவராக இருந்தவர் ( ஜெகதீப் தன்கர்), முற்றிலும் எதிர்பாராத வகையில் திடீரென வெளியேறினார். நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் அதுபோல் நிகழ்ந்ததில்லை.அவைத் தலைவர் என்பவர் அவையின் பாதுகாவலர். அவர் அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் சொந்தமானவர். ஆனால், அவருக்கு பிரவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன்” என்றார்.
கார்கேவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவர் அவர்களை சமாதானப்படுத்தி அமர வைத்தார். பின்னர் பேசிய கிரண் ரிஜிஜு, “புதிய அவைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய, வரவேற்க வேண்டிய நிகழ்வு இது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் கார்கே, தேவையின்றி தன்கர் விவகாரத்தை எழுப்பியுள்ளார். இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.






