கேரளா: பாலியக்கரா சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு-10-ந் தேதி முதல் அமல்


கேரளா:  பாலியக்கரா சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு-10-ந் தேதி முதல் அமல்
x
தினத்தந்தி 6 Sept 2025 9:54 PM IST (Updated: 6 Sept 2025 9:55 PM IST)
t-max-icont-min-icon

திருச்சூர்-சாலக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலியக்கரா சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்வு வருகிற 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

திருச்சூர்,

திருச்சூர்-சாலக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலியக்கரா சுங்கச்சாவடி உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில், 4 வாரங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, கடந்த ஒரு மாதமாக அந்த வழியாக சென்று வந்த வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட வில்லை.

இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் சுங்கச்சாவடி கட்டணம் திருத்தி அமைக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்க கட்டண உயர்வை அமல்படுத்த ஒப்பந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, ஒருவழி பாதையில் செல்லும் வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. வருகிற 9-ந் தேதி வரை சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

அதன் பின்னர் 10-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி, 4 சக்கர வாகனத்துக்கு ரூ.90 ஆக இருந்த கட்டணம் ரூ.95 ஆகவும், பஸ், லாரிகளுக்கு ரூ.320-ல் இருந்து ரூ.330 ஆகவும், ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயணம் சென்றால் ரூ.485 ஆக இருந்த கட்டணம் ரூ.495 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 6 சக்கரங்களுக்கு மேல் உள்ள மல்டி ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.515-ல் இருந்து ரூ.530 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே மன்னுத்தி-இடப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளதை சுட்டிக்காட்டி, போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணாமல் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story