சபரிமலை சன்னிதானத்தில் புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்களுக்கு தடை


சபரிமலை சன்னிதானத்தில் புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்களுக்கு தடை
x

ஏற்கனவே சன்னிதானத்தில் பக்தர்கள் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜை சீசனுக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிகர நிகழ்ச்சியாக கடந்த 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில் மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். நடப்பு சீசனையொட்டி வருகிற 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு அய்யப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் தோன்றும் மகர ஜோதியை சன்னிதானத்தில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

இதனிடையே. வழக்கமாக, நடை திறப்பு நாட்களில் சன்னிதானத்தில் புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் சபரிமலை தங்கம் அபகரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஏற்கனவே சன்னிதானத்தில் பக்தர்கள் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதித்திருந்தது.

இந்தநிலையில் சன்னிதானத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பத்திரிகையாளர்களுக்கும் கேரள ஐகோர்ட்டு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story